Monday, 2 November 2015

துக்ளக்கிடம் மாட்டிய மதுரை


யார் தமிழர் என்ற கேள்வி தற்பொழுது மக்களின் மனதில் தொக்கிநிற்கிறது . 

இனப் பெருமையும் , சாதிப் பெருமையும் பல்வேறு நேரங்களில் நமது அறிவுத்திறத்தை மழுங்கடிக்கும் என்ற விஷயம் பல வரலாற்று சம்பவங்கள் மூலம் நிருபனமாகும் நிதர்சனம் . 

நாயக்கர் மஹால் என்ற ஒரு கட்டிடம் , தமிழனுக்கு இழுக்கு என்று வரிந்துகட்டிக்கொண்டு இடுகைகளை பதியும் பலர் , அதே நாயக்கர் மன்னர்கள் தான் , இசுலாமியப் படையெடுப்பின் போது மதுரையில் இருந்து வெளியேறிய மீனாக்ஷியை , குமரி மாவட்டத்தில் இருந்த ஒரு சிறு ஆலயத்தில் இருந்து மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் திருகோவிலில் கொலுவேற்றினான் , பிரதிஷ்டை செய்தான் என்ற செய்தியை அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை .

மேலும் துக்ளக்கின் படையெடுப்பினால் சிதலம் அடைந்த பல கோவில்களை , மீனாக்ஷி அம்மன் கோவிலையும் சேர்த்து , எடுப்பித்து கட்டினான் என்ற செய்தி அறிந்தால் , இவர்கள் அக்கோவிலையும் தமிழனுக்கு இழுக்கு என்று கூறுவார்களா என்று தெரியவில்லை .

தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு திருப்பணி செய்து , மிக உயரிய கோபுரங்களை கட்டுவித்து , சைவ வைணவ ஆலயங்களுக்கு புத்துயிர் ஊட்டியது இவர்கள் ஆட்சியில் தான் . மதுரையிலும் , அதனை சுற்றி இருக்கும் ஊர்களிலும் நீர் நிலைகளை மீண்டும் தூர்வாரி , பல கண்மாய்களை உருவாகியதும் இவர்கள் தான் . வறண்ட பூமியான இங்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ் இனத்திற்கு தங்கள் காரியங்களால் தொண்டு செய்தவர்களா ? இல்லை இருக்கும் கண்மாய்களை , கீழ் இருக்கும் கருமை கல்லுக்காக பலி கொடுத்தவர்கள் தமிழர்களா அல்லது தமிழ் இனத்திற்கு தொண்டு செய்தவர்களா ?

வரலாற்று வாசிப்பும் , பிரஞ்ஞையும் இல்லாத இளையர் கூட்டத்தை எப்படி வேண்டுமானாலும் உசுபேற்றி விடலாம் என்ற எண்ணம் எத்தகைய கொடியது . மேலும் அது வெகு எளிதில் கட்டற்று போகலாம் என்பதும் நிதர்சனமான உண்மை .

அது ஏன் நாயக்கர் மஹாலுக்கு மாத்திரம் பல செப்பனிடும் பணிகள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது . காரணம் , மற்ற ஜமீன்களின் சிதலம் அடைந்த மாளிகைகள் நாயக்கர் மகாலைப் போன்று நகரத்தின் மையத்தில் இல்லை , மேலும் இந்த நூற்றாண்டு வரை நாம் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை எவ்வாறு பாதுகாத்தோம் என்பது ஊரறிந்த ரகசியம் . உண்மை இதுவாய் இருக்க ஏதோ ஒரு மிகப்பெரும் சதித்திட்டம் போன்று இதை பேசுவது நம் அறிவுத்திறத்திற்கு இழுக்கு .

மேலும் பெருநகரமாம் மதுரைக்கு மீண்டும் வாழ்வளித்த அம்மன்னர்களின் பெயரில் இருக்கும் அவ்வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் எந்த வகையினில் இழுக்கு என்று இப்பொழுதும் காரணங்களை தேடுகிறேன் .

அப்படி பார்த்தால் நம் தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகே உள்ள கோட்டையை எடுப்பித்து கட்டியது நாயக்க மன்னர்கள் தான் , அதை மேலும் உருமாற்றி கட்டியவர்கள் மராத்தியர்கள் . அப்படி என்றால் அதுவும் தமிழனுக்கு இழுக்கா ?

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் பல பணிகளையும் , சுற்றி சில கோவில்களையும் எடுத்து கட்டியவர்கள் அவர்கள் ? ஆகா அதுவும் தமிழனுக்கு இழுக்கா ? நீராதாரத்தை காக்க வேண்டி ஜல சூத்திரா என்னும் திட்டத்தை தஞ்சையில் செயல்படுத்திய அவர்கள் தமிழ் அகத்திற்கு தொண்டு செய்தவர்களா இல்லை அதன் மேல் மண் மூடி , வீடு கட்டி , அதை சுத்தப்படுத்த மக்கள் எண்ணியும் அவ்வெண்ணத்தை ஈடேற விடாமல் செயல்படுபவர்கள் தமிழர்களா ?

அப்படி என்றால் , தமிழ் மண்ணில் சொல்லெல்லா துயரத்தை ஏற்படுத்திய தாதுப்பஞ்சத்தை ஏற்படுத்திய ஆங்கிலேயர்கள் தான் பல நீர் ஆதாரங்களை , அணைக்கட்டுகளை மீண்டும் எடுப்பித்து கட்டினார் . ஆக , பல லட்சம் தமிழர்கள் அடிமைகளாய் தென் ஆபிரிக்கா , மொரிசியஸ் , பிஜி , மலேசியா , பிரெஞ்சு குயானா , இலங்கை போன்ற நாடுகளுக்கு செல்ல காரணமாய் இருந்தவர்களும் அவர்கள் தான் . ஆக , அவர்கள் கட்டிய நீர் ஆதாரங்களையும் , அணைக்கட்டுகளையும், ரயில் பாதைகளையும் , துறைமுகங்களையும் தகர்த்து , அவை யாவும் தமிழனுக்கு இழுக்கு என்று கூறுவார்களா ?

தமிழுக்கு , தமிழனுக்கு இழுக்கு யாதென்றால் மாறுகின்ற உலகில் தங்கள் நிலையை ஏற்படுத்திக்கொள்ளாமல் , ஆற்றல் மிகு இளையர்களை மடை மாற்றும் வேலைகளைச் செய்பவர்கள் தான் .

அந்த நிலையை ஏற்படுத்த இருக்கும் ஆயுதம் கல்வி மற்றும் பொருளாதாரம் . அந்நிலை இல்லையெனில் , தமிழும் அதன் பெருமையும் துக்ளக்கிடம் மாட்டிய மதுரை போன்று தான் .

சிதலம்


No comments:

Post a Comment